Thursday, December 6, 2012

கார்த்திகையின் அடை மழை ...
அடை அடையாய் , தேனடையாய்க் கார் மேகங்கள் !
வானம் ஒரு தனி வசீகரம் !
காற்றில் ஓர் ஈரிப்பு ;
ஒளியில் ஒரு சுகமான இருட்டு !
இயக்கம்.. இயக்கம்.. ஓயாத இயக்கம் வான் வெளியில் !
எங்கிருந்து ,..எது நோக்கி ,..எதனால் ,..எப்படி ?
கேள்விகளால் மனம் வானம்போல் !
நாட்கள் வேகமாக மேகங்களாய் நகர்ந்து விட்டன -
மழை விடைபெறும் நாள் இதோ இதோ வருகிறது -
மனம் கனக்கிறது ;
இத்தனை நாட்களாய் இந்தப் பாச உறவு !
இந்தப் பார்வை உறவு
மௌனங்களில் மாலைகளில் உறவாடிக்கொண்டு !
ஓராண்டு காத்திருக்க வேண்டும் பொறுமையாய்
இச்சூல்கொண்ட நிறைமாத கார்முகங்கள் காண்பதற்கு !
வானின் ஆப்பரிக்க திருவிழாவிற்கு!
இரவின் நிசப்தத்தில் தனிமையாய்
'சோ ' விடும் நாதங்கள் கேட்பதற்கு !
ஒளிச் சிமிட்டல்கள் பார்ப்பதற்கு !
இடையறாத் தாழ் உறுமல்கள் இசைவதற்கு !
குடைகள் பூப்பதற்கு--
ஓடி ஒளிவதற்கு -
வீதி எல்லாம் நீர்ப் பூக்கள் சிரிப்பதற்கு !
வானின் பட்டு நெசவுக்கு !
நிலமெங்கும் முகம் பார்க்கும் கண்ணாடியாய்
பசுமையின் மழலைகள் ஆடித் திரிவதற்கு !
நீர்ப் பறவைச் சிங்கார அணிவகுப்பிற்கு !
ஏரிகளின் பருவ விம்முதற்கு !
ஆம் ..கார்காலம்
நெஞ்ச ஏரி கனக்கிறது !
---சந்திர கலாதர்
06.12. 2012 / வியாழன் /கார்த்திகை 21
மாலை 6 மணி
S..CHANDRA KALAADHAR

No comments:

Post a Comment