கிராமத்துக்கு ஓடணும்போலத் தோணுது
ஐயோ ! நகர நெரிசல் கொஞ்சம்கூடத் தாங்கலே !
எல்லா வசதி வாய்ப்பும் சல்லிசாக் கிடைக்குது !
ஆனா உசிருக்கு மட்டும் உத்தரவாதம் இல்லையே -
காட்டாறு போல பஸ் லாரி பறக்குது-
தெரு கடந்திடத்தான் மணிக்கணக்கா ஆகுது -
அப்பக்கூட உயிர் கையில் இல்லையே -
இராப் பகலா இரைச்சல் காதைக் கிழிக்குதே -
பைத்தியந்தான் பிடித்துவிடப் போகுதே !
நீதி நேர்மை எவனும் பார்ப்பது இல்லையே -
வீதியையே விலைபேசி விக்கறான் -
சட்டம் ஒழுங்கு கைகட்டி நிக்குது
பொறுக்கி எல்லாம் சட்டம் செய்ய நுழைஞ்சுட்டான்
பொறுமையைக் காலடியில் மிதிச்சுட்டான்
விடிஞ்சு எழுந்தால் கற்பழிப்பு கொள்ளைதான்
புழுங்கிப் புழுங்கி நெஞ்சே புண்ணாகிப்போச்சுதே !
கிராமத்துக்கு ஓடணும்போலத் தோணுதே
கையக்காலை வீசி அங்கே நடந்திருப்பேன்
ஆசை தீர மூச்சிழுத்து ரசித்திருப்பேன்
கிறுக்கன்போலப் பாடிக்கிட்டுத் திரிந்திருப்பேன்
வரப்புமேல ஓடியாடிச் சிரித்திருப்பேன்
ஆலமரம் அரச மரம் ஒண்ணுவிடாமல்
அடிபடுத்திருந்தே கனவு கண்டிருப்பேன்
புளிய மரக் கொழுந்துகளைப் பறித்திருப்பேன்
தின்றுவிட்டு முகம் சுளித்திருப்பேன்
பன்னீர் மரம் பக்குவமாய் உலுக்கி இருப்பேன்
மலர்ச் சொரிவில் மனம் மலர்ந்திருப்பேன்
பூக்காம்பினிலே நாதஸ்வரம் கீசி இருப்பேன்
பனைமரப் பரட்டைத் தலை சிரித்திருப்பேன்
வீரன்போல நிற்பதாலே நெஞ்சு நிமிர்ந்திருப்பேன்
கூட்டமில்லாக் கோயிலிலே மனம் கூடி நின்றிருப்பேன்
நெஞ்சார நிலம் தாழ்ந்து பணிந்திருப்பேன்
பறவைகளைக் கண் குளிரப் பார்த்திருப்பேன்
வெண்ணிலாவின் வீதியிலே குளித்திருப்பேன்
அந்திநேர அழகையெல்லாம் குடித்திருப்பேன்
விண்மீனை விடிய விடியப் பார்த்திருப்பேன்
தென்றல் எனும் தேன் குடித்துத் திரிந்திருப்பேன்
விழியினில் பசுமை பூசி மகிழ்ந்திருப்பேன்
வெட்ட வெளி வான் பார்த்துப் படுத்திருப்பேன்
நிம்மதியாய்க் கண்மூடித் துயின்றிருப்பேன் !
கிராமத்துக்கு நான் போகப் போறேன் ஆஹா !
-----சந்திர கலாதர்

No comments:
Post a Comment